ஜெனீவா,
மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் கணிசமாக வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், ராணுவத்தால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்கள் அகதிகளாக வங்காளதேசம், இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். இந்தியாவில் 14 ஆயிரம் ரோஹிங்யாக்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக பதிவு பெற்றவர்கள். மீதம் உள்ள 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொள்கிறது.
இதற்காக அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுக்களிடம் கேட்டுகொண்டுள்ளது.
இந்நிலையில் 7 ரோஹிங்யாக்கள் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களை மணிப்பூரில் உள்ள மொரே எல்லையில், மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்தியா வந்த ரோஹிங்யாக்கள் நாடு கடத்தப்படுவது, இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தாங்கள் மியான்மருக்கு சென்றால் இனப்படுகொலைக்கு ஆளாவோம் என்பதால் தங்களை நாடு கடத்தக்கூடாது என 7 பேர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது.
இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறினர். இவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்து சிலிசார் சிறையில் அடைத்து இருந்தனர். இவர்களை நாடு கடத்த உள்ளூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஐ.நா.சபை கண்டனம்
இந்தியா 7 ரோஹிங்யாக்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக ராணுவம் ஏற்கனவே கொடூரமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இப்போது அங்கு செல்பவர்களும் அதே நிலைதான் நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்தியா நடவடிக்கையை எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட 7 பேரின் பாதுகாப்பு குறித்து அதீத கவலைக்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகள் தங்களுடைய எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ஐ.நா. சபை கவலையை தெரிவித்துள்ளது.