வாஷிங்டன்,
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதையடுத்து அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா மீட்டு வருகிறது. இதற்கான மீட்பு நடவடிக்கைகள் காபூல் விமான நிலையம் மூலம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் உள்பட 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்களால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து ஏவப்பட்ட ஐந்து ராக்கெட்டுகளையும் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் தடுத்து அழித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அனைத்து ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதா? என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் இல்லை. இதற்கிடையில், காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் எந்த இடையூறும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.