தலீபான் வசமாகிய ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆக்கிரமிப்பின் காரணமாக கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி முதல் அமெரிக்காவின் சார்பில் சுமார் 17 ஆயிரம் ஆப்கானிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஆவர். அங்குள்ள ராணுவ அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும், அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு உதவியாகவும் அவர்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலீபான்கள் தலைநகரை கைப்பற்றியதும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்து அவர்கள் அமெரிக்க ராணுவத்தினரிடம் தஞ்சமடைந்தனர். அவர்களை சிறப்பு ராணுவ விமானம் மூலம் அமெரிக்க படையினர் நாட்டை விட்டு வெளியேற்றி வந்தனர். அதுமட்டுமல்லாமல் 2 ஆயிரத்து 500 அமெரிக்க குடிமக்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளும் இதில் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல ராணுவ விமானங்கள் அமீரகத்தின் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ராணுவ விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியும் வழியனுப்பப்பட்டது.
நன்றிக்கடன் பட்டுள்ளோம்
இந்த மனிதாபிமான செயல்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அமெரிக்க குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பதற்கு அமீரகம் பெரிதும் உதவியுள்ளது. உறுதியான நட்புறவுக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
ஸ்பெயின் நாட்டு பிரதமரும் நன்றி
அவரை தொடந்து ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செசும் அபுதாபி பட்டத்து இளவரசரை தொலைபேசியில் அழைத்து நன்றி கூறியதாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.