ஆன்மிகம்

தசரா திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரனை வதம் செய்த முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

தினத்தந்தி

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

இந்நிலையில் 10-ம் நாளான நேற்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தாகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் மூன்று முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடாந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.

அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

தசரா திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை.) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன், கோவில் வந்து சேர்கிறார். 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன், வேடம் அணிந்த பக்தர்களும் காப்பு களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான நாளை (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் நடைபெறுகிறது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்