இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் உருவாகிய கிறிஸ்தவர்களுக்கு ஆலயம் என்ற அமைப்போ அல்லது இன்று கிறிஸ்தவர்கள் பின்பற்றும் வழிபாட்டு ஒழுங்குகளோ கிடையாது. அவர்கள் பெரும்பாலும் "அப்போஸ்தலர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்" (திருத்தூதுவர் பணிகள் 2:42,46).
அவர்கள் கூடுவதின் முக்கிய நோக்கம் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல், அவரது கற்பித்தலைப் புரிந்து கொள்ளுதல், தங்களிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளுதல், மற்றும் பாகுபாடு இன்றி சேர்ந்து, பகிர்ந்து உண்ணுதல் என்பதாகும்.
சாலமோன் அரசர் கடவுளிடம் ஞானம் நிறைந்த உள்ளத்தைக் கேட்டார் என்பது நமக்குத் தெரியும் (1 அரசர்கள் 3:9 ). அவர் அந்த ஞானத்தைக் கொண்டு கடவுளையும், ஆலயத்தையும் எவ்வாறு புரிந்து கொண்டார் என்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. ஆலயம் குறித்தும், அங்கு மக்கள் கூடுவது குறித்தும் சாலமோன் அரசரின் புரிதலை கீழ்க்கண்டவாறு கூறலாம்:
1) கடவுள் மனுக்குலத்தின் மீது பேரன்பு கொண்டவர், 2) கடவுளை மனிதர் கட்டிய ஆலயத்தில் அடைத்து வைக்க முடியாது, 3) ஆலயம் என்பது கடவுளிடம் வேண்டுதல்களை ஏறெடுக்க உதவும் ஓர் இடம், 4) தனிநபர்கள் மற்றும் கூட்டுச் சமூகமாக தங்கள் குற்றங்களைக் கடவுளிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற உதவும் இடம், 5) அனைத்து மக்களின் தேவைகளுக்காகவும். இடர்கள், பேரிடர்களிலிருந்து காக்கவும் மன்றாடும் இடம், 6) இஸ்ரவேல் மக்கள் மட்டுமல்ல வேற்று இனத்தவரின் வேண்டுதல்களும் ஏறெடுக்கப்படும் இடம். (1 அரசர்கள் 8).
ஆலயம் என்பது அடிப்படையில் கடவுளிடம் உரையாடவும், அவருக்கு செவிசாய்க்கவும், ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளவும் உதவும் இடம். இன்று கிறிஸ்தவ ஆலயம் எதற்காகப் பயன்படுகிறது? சிந்திப்போம்.
கடவுளுக்கு அஞ்சி வாழ வழிபாடு நமக்கு உதவுகிறது. கடவுளைப் போற்றியே வழிபாட்டில் பங்கேற்பதும் அவசியமாகிறது. (திருப்பாடல்கள் 103:1).
வழிபாட்டில் தனிநபர் புகழ்பாடவோ, புகழ்தேடவோ கூடாது. வழிபாட்டில் பங்கேற்பது இவ்வுலகில் நாம் நடத்தும் வாழ்க்கை தவறான பாதையில் சென்றுவிடாதிருக்க உதவுகிறது. குறிப்பாக நம் வாழ்க்கை பொய்களால் நிரப்பப்படாமல் உண்மைக்குச் சான்றாக வாழ உதவுகிறது.
கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிப்பதுடன், நமது அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வழிபாடு உதவுகிறது.
நமது அருள்நாதர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஓய்வு நாளையும், வழிபாட்டையும் விடுதலைக்கு உரியதாய் மாற்றினார். "பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்" (மத்தேயு 9:13) என்று கூறி சமயச் சட்டங்கள், சடங்குகள் மற்றும் பலிகளால் சிக்குண்டிருந்த மக்களைப் பல்வேறு எதிர்ப்புகள் நடுவே விடுவித்தார்.
ஓய்வு நாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்று சமயத்தலைவர்கள் வலியுறுத்தி வந்த நேரத்தில் ஒய்வு நாளை விவாதப் பொருளாக்கி "ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை" (மாற்கு 2: 27) என்ற புரட்சிகரமான விளக்கத்தை அளித்தார்.
ஓய்வு நாளில் நோயில் அவதியுற்றிருந்தோர் பலரைக் குணமாக்கி விடுதலை அளித்தார். அப்படித்தான் ஒரு முறை கை சூம்பிய நிலையில் இருந்த ஒருவரை தொழுகைக் கூடத்தில் சந்தித்தார். அவரை தொழுகைக்கூடத்தின் நடுவில் நிறுத்தி அங்கு கூடியிருந்தவர்களிடம் குறிப்பாக அவரைக் குற்றப்படுத்தக் காத்திருந்தவர்களிடம், "ஓய்வு நாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை? என்று கேட்டு, சூம்பிய கையுடையவரைப் பார்த்து 'கையை நீட்டும்' என்று கூறி அவரைக் குணப்படுத்தினார்.
அருள்நாதர் இயேசு கிறிஸ்து அனைத்து மக்களின் விடுதலையை குறிப்பாக அநீதியான சட்டங்களால், பண்பாடு மற்றும் சுரண்டுகின்ற பொருளாதார அமைப்புகளால் அடிமைப்பட்டு இருந்தவர்களுக்கு விடுதலைப் பாதையைக் காண்பித்தார்.
இதன் மூலம் கடவுள் அன்புள்ளவர், நீதியையும் இரக்கத்தையும் இவ்வுலகில் நடைமுறைப்படுத்துகிறவர் என்பதை வெளிப்படுத்தினார்.
நம்முடைய வழிபாடுகளில் கடவுளின் வெளிப்பாட்டை நாம் உணரவும் பிறர் அதைக் காணவும் முயற்சி செய்வோம்.