ஆன்மிகம்

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நாளை தொடக்கம்

மைசூரு தசரா திருவிழாவின் சிகர நிகழ்வாக, அக்டோபர் மாதம் 2-ந்தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்க உள்ளது.

தினத்தந்தி

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா. கர்நாடகத்தின் நாடஹப்பா என அழைக்கப்படும் தசரா விழா கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்று விளங்குகிறது.

வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கடந்த 414 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 415-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா செப்டம்பர் மாதம் 22-ந்தேதி (நாளை) தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே அரசு சார்பில் அமைக்கப்பட்ட தசரா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

எழுத்தாளர் பானு முஷ்தாக்

இந்த ஆண்டு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை தொடங்க உள்ளது. இதில் இளைஞர் விழா ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

நாளை காலையில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதனையடுத்து அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளி தேரில் எழுந்தருளுகிறார்.

இதையடுத்து காலை 10.10 மணி முதல் காலை 10.46 மணிக்குள் சுப ரிஷிகா லக்கனத்தில் புக்கர் விருது பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். அதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசரா விழாவை பொதுவான நபர், பிரபலங்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எழுத்தாளர் பானு முஷ்தாக் தசரா விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

முதல்-மந்திரி சிறப்பு பூஜை

தொடக்க விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மன்னரும், மைசூரு-குடகு தொகுதி எம்.பி.யுமான யதுவீர் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்களை தூவி வணங்குகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முதல்-மந்திரி சித்தராமையா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்.

தசரா விழா தொடங்கியதும், தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் வரிசையாக தொடங்கி நடைபெறும். இந்த தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மைசூருவுக்கு வர உள்ளார்.

தனியார் தர்பார்

இதற்கிடையே மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் தொடங்கும். இந்த பூஜைகளை அரண்மனை அர்ச்சகர் தலைமையில் மன்னர் யதுவீர் எம்.பி. தொடங்கி வைப்பார். அதனை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தசரா விழாவையொட்டி மன்னர் யதுவீர் எம்.பி. தனியார் தர்பார் நடத்துவார். நாளை சிம்மாசனத்துக்கு அரண்மனை முறைப்படி பூஜைகள் செய்யப்படும்.

பின்னர் ராஜ உடையில் வீரநடை போட்டு மன்னர் யதுவீர் தனியார் தர்பாருக்கு வந்து சிம்மாசனத்தில் அமருவார். இதையடுத்து அங்கு தனியார் தர்பார் நடத்துவார். இந்த தனியார் தர்பார் தசரா விழாவின் 11 நாட்களும் நடைபெறும்.

ஜம்பு சவாரி ஊர்வலம்

அடுத்த மாதம் 2-ந்தேதி தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்க உள்ளது. முன்னதாக அன்று காலை மைசூரு அரண்மனை வளாகத்தில் காலை 8 மணி முதல் காலை 8.30 மணிக்குள் தலையில் கத்திப்போட்டு ரத்தம் சிந்தும் மல்யுத்த போட்டி நடத்தப்படும். இந்த போட்டியில் யாராவது ஒரு வீரரின் தலையில் கத்திப்பட்டு ரத்தம் வடிந்தவுடன் போட்டி முடிவுக்கு வந்துவிடும். பின்னர் மைசூரு அரண்மனையில் முன்பு கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி தூணுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 1.10 மணிக்குள் சுப தனூர் லக்கனத்தில் சித்தராமையா சிறப்பு பூஜை செலுத்த உள்ளார். அதனை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் கண்கவர் அலங்கார வண்டிகளின் ஊர்வலம், கலை குழுவினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். பின்னர் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கும்.

இதற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும். பின்னர் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளுவார். அவர் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு யானைகள் ஊர்வலமாக புறப்படும். மைசூரு தசரா விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்