தலையங்கம்

மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்யும் எல்.ஐ.சி.

ஆயுள் காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி. நிறுவனம் 65 ஆண்டுகளை கடந்து, 66-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தினத்தந்தி

ஆயுள் காப்பீட்டு கழகம் என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி. நிறுவனம் 65 ஆண்டுகளை கடந்து, 66-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. உங்கள் கனவுகள் மற்றும் ஆவல்களை புரிந்துகொண்டு, அவற்றை பூர்த்திசெய்ய நாங்கள் உதவுகிறோம் என்று இந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், நாம் தமிழர் கட்சியை நடத்தியபோது, தான் முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்து பொதுக்கூட்டங்களில் ஒரு கருத்தை கூறுவார். நாம் ஒரு மாங்கொட்டையை நட்டு அது முளைத்தவுடன், தண்ணீர்விட்டு பராமரிக்கிறோம். நாம் உயிரோடிருக்கும் காலத்தில் அது மரமாக வளர்ந்து கனி தந்தால் அந்த மாம்பழத்தை நாம் சாப்பிட முடியும். அதன் சுவையை நாம் ருசிக்க முடியும். ஒருவேளை இடைப்பட்ட காலத்தில் நம் உயிர்பிரியும் நிலை ஏற்பட்டால், நமது வாரிசுகளும், எதிர்கால சந்ததிகளும் அந்த மாமரத்தின் விளைச்சலில் கிடைக்கும் மாம்பழங்களை ருசிக்க முடியும் என்பார். அதுதான் எல்.ஐ.சி.யின் தத்துவம். ஒருவர் எல்.ஐ.சி.யில் பாலிசி எடுத்து பிரீமியம் கட்டுகிறார். அந்த தொகை முதிர்வடையும் காலத்தில் அவர் உயிரோடு இருந்தால், அதன் பலனை அவர் அனுபவிக்க முடியும். ஒருவேளை இயற்கை அவரை உலகில் இருந்து பிரித்துவிட்டால், அவர் தன் வாழ்க்கை துணைக்கும், வாரிசுகளுக்கும் கஷ்டங்கள் இல்லாமல் பணம் வழங்கும் ஒரு அற்புதமான சேவையை எல்.ஐ.சி. வழங்குகிறது.

அந்தவகையில், எல்.ஐ.சி.யில் பாலிசி எடுப்பவர்களின் பணத்துக்கு ஒரு உத்தரவாதத்தையும், ஆயுள் காப்பீட்டை அனைத்து பகுதி மக்களுக்கும் கொண்டு செல்வதும், எல்.ஐ.சி. தவணையாக கிடைக்கும் பணத்தை நாட்டின் நலப்பணிகளுக்கு முதலீடு செய்வதும் என்ற உயரிய நோக்கோடு 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி ரூ.5 கோடி முதலீட்டில் மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாக பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் இருந்தே மக்களின் நம்பிக்கையை இந்த எல்.ஐ.சி. நிறுவனம் பெற்றது. இன்று எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.38 லட்சத்து 5 ஆயிரத்து 610 கோடியாகவும், ஆயுள் காப்பீட்டு நிதி ரூ.34 லட்சத்து 36 ஆயிரத்து 686 கோடியாகவும் உள்ளது. தற்போது எல்.ஐ.சி.யில் தனிநபர் பாலிசி வாங்கியிருப்பவர்கள் 28 கோடியே 62 லட்சம் பேர். குழு பாலிசி பெற்றிருப்பவர்கள் 12 கோடி பேர். அந்தவகையில் உலகில் 3-வது நிலையான நிறுவனமாக எல்.ஐ.சி. விளங்குகிறது. ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 987 ஊழியர்கள், 13 லட்சத்து 53 ஆயிரத்து 808 ஏஜெண்டுகள் என்று 2 ஆயிரத்து 48 கிளை அலுவலகங்கள், 1,546 துணை அலுவலகங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் பரந்து விரிந்து, சாதாரண குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை ஒரு பொருளாதார பாதுகாப்பை மக்களுக்கு வழங்குகிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்து 205 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனக்கு கிடைக்கும் உபரி நிதியில் 5 சதவீதம் மத்திய அரசுக்கு லாப பங்கு தொகையாகவும், 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு போனசாகவும் வழங்கிவருகிறது. இதுதவிர, மக்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தால் மக்களுக்கு பலன் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய மாநில அரசுகள் மற்றும் பல்வேறு நலப்பணித்திட்டங்களிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஆனால் எல்.ஐ.சி.யில் மக்களால் கோரப்படாமல் கிடக்கும் தொகை ஏறத்தாழ ரூ.19 ஆயிரம் கோடி அப்படியே இருக்கிறது. தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டங்களில் மக்களிடமிருந்து வசூலித்த பணத்தை அவர்கள் குடும்பங்களுக்கே வழங்குவதற்கான ஏற்பாடுகளை எல்.ஐ.சி. நிறுவனம் மேற்கொள்ளவேண்டும். இதுமட்டுமல்லாமல், தற்போது எல்.ஐ.சி.யின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் முடிவை மத்திய அரசாங்கம் எடுத்திருக்கிறது. எனவே, விரைவில் எல்.ஐ.சி.யின் பங்குகளை பொதுமக்களும் வாங்கிக்கொள்ள முடிகிற நிலை ஏற்படப்போகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்