மத்திய பட்ஜெட் - 2023

ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு - 2013-2014 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகம்

ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 2013-2014 நிதி ஆண்டு ஒதுக்கீட்டை விட 9 மடங்கு அதிகம்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு, ரெயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து பா.ஜனதா அரசு, பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டையும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறது.

ரெயில்வே துறைக்கான ஒதுக்கீடு குறித்து நேற்றைய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-

ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2013-2014 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இது 9 மடங்கு அதிகம்.

நிலக்கரி, உரம், உணவு தானியங்கள் ஆகியவற்றை ஓரிடத்தில் இருந்து கடைசி இடம் வரை கொண்டு செல்வதற்கான 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டுடன் முன்னுரிமை அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்படும்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ராஜதானி, சதாப்தி, துரந்தோ, ஹம்சபர், தேஜாஸ் ஆகிய முக்கிய ரெயில்களின் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெட்டிகள் புதுப்பிக்கப்படும். நவீன தோற்றத்துடனும், பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளுடனும் இந்த பெட்டிகளின் உட்புறம் நவீனப்படுத்தப்படும்.

மேலும் பல ஊர்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தொடங்கப்பட உள்ளன. அதனால், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்க குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது.

சுற்றுலா பயணிகளை கவர மேலும் 100 விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 35 ரெயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு