கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி - தொடரை சமன் செய்தது

இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் சமன் செய்தது.

பெங்களூரு,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மொகாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் அன்ரிச் நார்ஜே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பீரன் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார்.

டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் இறங்கினார்கள். ஷிகர் தவான், ஜோர்ன் போர்ச்சுன் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். 2-வது ஓவரில் காஜிசோ ரபடா பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விரட்டிய ரோகித் சர்மா (9 ரன், 8 பந்துகளில்) அடுத்த ஓவரில் பீரன் ஹென்ரிக்ஸ் பந்து வீச்சை அடித்து ஆடினார். அந்த பந்து எட்ச் ஆகி சிலிப்பில் நின்ற ரீஜா ஹென்ரிக்ஸ் கையில் தஞ்சம் அடைந்தது.

அடுத்து கேப்டன் விராட்கோலி களம் இறங்கினார். பெலக்வாயோ பந்து வீச்சில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய ஷிகர் தவான், தப்ரைஸ் ஷம்சி வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

7.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 63 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான், தப்ரைஸ் ஷம்சி வீசிய பந்தை அடித்து ஆடுகையில் பந்து மேல் நோக்கி உயரமாக எழும்பி சென்றது. அதனை பவுமா நேர்த்தியாக கேட்ச் செய்தார். ஷிகர் தவான் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ரன் வேகம் மந்தமானது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட்கோலி (9 ரன், 15 பந்துகளில்) ரபடா பந்து வீச்சில் பெலக்வாயோவிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 68 ரன்னாக இருந்தது.

இதனை அடுத்து ரிஷாப் பண்ட் (19 ரன், 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ஸ்ரேயாஸ் அய்யர் (5 ரன்), குருணல் பாண்ட்யா (4 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். 7-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.2 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய இந்திய அணி 15.1 ஓவரில் தான் 100 ரன்னை கடந்தது.

கடைசி ஓவரில் முதல் பந்தில் ரவீந்திர ஜடேஜா (19 ரன், 17 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ரபடா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் (4 ரன்) எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் ரன்-அவுட் ஆகி நடையை கட்டினார். ஹர்திக் பாண்ட்யா (14 ரன், 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ரபடா பந்து வீச்சில் டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் சரிந்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. தீபக் சாஹர், நவ்தீப் சைனி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் காஜிசோ ரபடா 3 விக்கெட்டும், ஜோர்ன் போர்ச்சுன், பீரன் ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தென்ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் அபாரமாக இருந்தது.

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீஜா ஹென்ரிக்ஸ், கேப்டன் குயின்டான் டி காக் ஆகியோர் களம் இறங்கினார்கள். குயின்டான் டி காக் அடித்து ஆடினார். ரீஜா ஹென்ரிக்ஸ் அவருக்கு பக்கபலமாக நின்றார். 10.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 76 ரன்னாக இருந்த போது ரீஜா ஹென்ரிக்ஸ் 26 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து பவுமா, கேப்டன் குயின்டான் டி காக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பவுமா சிக்சர் அடித்து அணி வெற்றி இலக்கை கடக்க வைத்தார். 16.5 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அரைசதம் அடித்த கேப்டன் குயின்டான் டி காக் 52 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்னும், பவுமா 23 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடந்த போட்டியிலும் குயின்டான் டி காக் அரைசதம் அடித்து இருந்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் பீரன் ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகன் விருதும், குயின்டான் டி காக் தொடர்நாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை