கிரிக்கெட்

பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு பேட்டை பரிசாக அளித்த டோனி

டோனி, பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு தனது பேட்டை பரிசாக அளித்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரிக்கெட் வீரர் டோனியின் தீவிர ரசிகர் ஆவார். அவரது ஆசைப்படி டோனி தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மூலம் ஸ்ரீகாந்துக்கு வழங்கியுள்ளார். அதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஸ்ரீகாந்த் டுவிட்டர் பக்கத்தில் டோனி, உங்களின் அற்புதமான பரிசுக்கு நன்றி. உங்களின் பரிசை பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது, இந்த நாளை என்னுடைய நாளாக மாற்றி விட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்து முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு தலைவருமான எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், என்னை கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்திய கே.வி.எஸ்.கிருஷ்ணா தான், பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தின் தந்தை ஆவார். ஒரு நாள் ஸ்ரீகாந்த் என்னிடம், எனக்கு டோனியிடம் இருந்து ஒரு பரிசு வாங்கி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நான், நீ பேட்மிண்டனில் மிக உயர்ந்த நிலையை (நம்பர் ஒன் இடம்) எட்டு. அப்போது உன் ஆசையை நிறைவேற்றி தருகிறேன் என்று அவரிடம் உறுதி அளித்தேன். சமீபத்தில் ஸ்ரீகாந்த் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். இதையடுத்து அவரது விருப்பத்தை டோனியிடம் சொன்னேன். இதை கேள்விப்பட்டு மகிழ்ந்த டோனி, தன்னிடம் இருந்த பேட்டில் கையெழுத்திட்டு அதை ஸ்ரீகாந்திடம் பரிசாக கொடுத்து விடும்படி கூறினார். நானும் பேட்மிண்டன் விளையாடுவேன். இந்திய பேட்மிண்டன் போட்டிகளை அதிகமாக பார்ப்பேன் என்றும் டோனி அப்போது சொன்னார் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்