சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்று முன்தினம் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். கிரிக்கெட் உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் -யின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் 133 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் எண்ணற்ற வெற்றிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.
இவரின் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்-யின் நெருங்கிய நண்பருமான பிரெட் லீ உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சைமண்ட்ஸ் மறைவுக்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " ஜூனியர் கிரிக்கெட் போட்டியின் போதே ராயை (சைமண்ட்ஸ்) எனக்கு தெரியும். நான் பார்த்ததிலேயே மிகவும் திறமையான விளையாட்டு வீரர்களில் அவரும் ஒருவர்.
அவர் பணத்திற்காகவோ அல்லது புகளுக்காகவோ ஒருபோதும் விளையாடியதில்லை. இந்த விஷயங்கள் அவருக்கு பொருத்தமற்றவை. எந்த அணியிலும் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரராக அவர் இருந்தார் " என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.