டாக்கா,
வங்காளதேச 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம் உள்பட 50 வீரர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் எந்த வித போட்டிகளிலும் கலந்து கொள்ளமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். வங்காளதேச கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதுடன், ஒப்பந்த வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். போட்டி கட்டணம் மற்றும் பயணப்படி தொகையை உயர்த்த வேண்டும். டாக்கா பிரிமீயர் லீக் போட்டியில் வீரர்கள் மாற்றம் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும். வங்காளதேச பிரிமீயர் லீக் போட்டியை வர்த்தக முறையில் நடத்த வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பயிற்சி உள்பட கிரிக்கெட் தொடர்பான எல்லா நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் வங்காளதேச கிரிக்கெட் அணி நவம்பர் 3-ந் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட முடிவு செய்து இருந்தது திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஷகிப் அல்-ஹசன் உள்ளிட்ட வீரர்கள் குழுவினரை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்கள். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வீரர்கள் தரப்பில் மேலும் 2 வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது வங்காளதேச கிரிக்கெட் வாரிய வருமானத்தில் குறிபிட்ட சதவீதத்தை வீரர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அதே அளவிலான தொகையை வீராங்கனைகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் வீரர்கள் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.
வீரர்கள் விடுத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கருத்து தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக நடைபெற்றது. வீரர்கள் முன்வைத்த 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வீரர்கள் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கடைசியாக வைத்த கோரிக்கைக்கும் சம்மதம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தைக்கு சில மணி நேரத்துக்கு முன்வைக்கப்பட்ட 2 கோரிக்கை குறித்து எதுவும் தெரியாது என்றார்.
இதைத் தொடர்ந்து வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் அளித்த ஒரு பேட்டியில், வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் சொன்னது போல் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவரும், வாரிய இயக்குனர்களும் உறுதி அளித்தனர். அவர்களின் உறுதிமொழியின் அடிப்படையில் நாங்கள் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாட உள்ளோம். பயிற்சி முகாமிலும் பங்கேற்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதால் இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.