கோப்புப்படம் 
கிரிக்கெட்

இந்தியா-இலங்கை போட்டி நாளை தொடக்கம்: பகல்-இரவு டெஸ்டில் சுவாரஸ்யமான சாதனைகள்

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டி பகல்-இரவு போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) ஆகும். ஸ்டேடியத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரு நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க கர்நாடக மாநில அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதனால் இந்த டெஸ்டில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பகல்-இரவு ஆட்டம் 2015-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. மின்னொளியின் கீழ் நடக்கும் இந்த போட்டிக்கு மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பந்து) பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை டெஸ்டில் சூரியன் மறையும் அந்திப்பொழுதில் பந்துவீச்சை எதிர்கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும், அந்த சமயத்தில் கூடுதல் கவனமுடன் விளையாட வேண்டும் என்பது பெரும்பாலான பேட்ஸ்மேன்களின் கருத்தாகும். பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களை இங்கு பார்க்கலாம்.

அனைத்து போட்டியிலும் முடிவு

*பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் இதுவரை நடந்துள்ள 18 டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்துள்ளது. டிரா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆஸ்திரேலியா தான் ஆடியுள்ள 10 பகல்-இரவு டெஸ்டிலும் வாகை சூடி கம்பீரமாக பயணிக்கிறது.

*இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. 2019-ம் ஆண்டு நவம்பரில் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து 2020-ம் ஆண்டு இறுதியில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 2 நாளில் அந்த அணியை அடக்கி இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 11 விக்கெட்டுகளை அள்ளினார்.

*இலங்கை அணியும் 3 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.

கோலியின் சதம்

*பகல்-இரவு டெஸ்டில் இதுவரை 23 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (335 ரன்), பாகிஸ்தானின் அசார் அலி (302 ரன்) ஆகியோர் முச்சதம் விளாசியதும் அடங்கும். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் 3 சதம் அடித்துள்ளார். இந்திய தரப்பில் பகல்-இரவு டெஸ்டில் சதத்தை ருசித்த ஒரே வீரர் விராட் கோலி தான். 2019-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்திருந்தார். இது தான் அவர் கடைசியாக அடித்த சதமும் ஆகும்.

*அதிக ரன் குவித்தோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் (704 ரன்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கும் (10 டெஸ்டில் 56 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்கள்.

*2019-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 36 ரன்னில் முடங்கியது ஒரு அணியின் மோசமான ஸ்கோராகும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்