சென்னை,
சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2026 தொடரில் தனது நான்காவது போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்காக முதல் சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், 56 பந்துகளில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115* ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பராக அவர் சாதனை படைத்தார்.
மேலும், சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த தோனியின் (84 ரன்கள், 2019) சாதனையையும் சாம்சன் முறியடித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக (டெல்லி, ராஜஸ்தான், சென்னை) சதம் அடித்த இரண்டாவது வீரராகவும் மாறியுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை கே.எல்.ராகுல் படைத்திருந்தார்.
இதுமட்டுமில்லாமல் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை 8 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன், 2018 ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் சதம் அடித்தபோது சிஎஸ்கே வெற்றி பெற்றது.
அதன்பிறகு, 2021 மற்றும் 2024 சீசன்களில் ருதுராஜ் சதம் அடித்திருந்தாலும், அந்த போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் ஆரம்பத்தில் சற்றே திணறிய சாம்சன், இந்த சதத்தின் மூலம் தனது பார்முக்கு திரும்பியுள்ளார். அடுத்து, சிஎஸ்கே அணி 14-ம் தேதி சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.