கொல்கத்தா,
தமிழக அணி 2-வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
பி பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியிருந்தது. தமிழக அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை எதிர்கொண்டது. கட்டாக்கில் நடந்த இந்த மோதலில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 36 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது. தமிழகம் தரப்பில் ரஹில் ஷா, முகமது, அஸ்வின் கிறிஸ்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 27.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை ருசித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (56 ரன்), விஜய் சங்கர் (58 ரன்) அரை சதம் அடித்து களத்தில் நின்றனர்.
டோனி 129 ரன்
டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜார்கண்ட் அணி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் சத்தீஷ்கரை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 57 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. இதன் பின்னர் ஜார்கண்ட் கேப்டன் டோனியும், ஷபாஸ் நதீமும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நதீம் 53 ரன்கள் எடுத்தார். சதத்தை நொறுக்கிய டோனி (129 ரன், 107 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி பந்தில் கேட்ச் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஜார்கண்ட் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய சத்தீஷ்கர் அணி 38.4 ஓவர்களில் 165 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஜார்கண்ட் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.
யுவராஜ், கம்பீர் டக்
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஒரு லீக்கில் பஞ்சாப்-அசாம் (ஏ பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹர்பஜன்சிங் தலைமையிலான பஞ்சாப் 49.4 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. யுவராஜ்சிங் டக்-அவுட் (6 பந்து) ஆனார். சுமான் கில் 121 ரன்கள் விளாசினார். இந்த இலக்கை அசாம் அணி 48.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புவனேஸ்வரில் நடந்த இமாச்சலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி (பி பிரிவு) 185 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இமாச்சல பிரதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பிரசாந்த் சோப்ரா 159 ரன்கள் (24 பவுண்டரி, 3 சிக்சர்) சேகரித்தார். அடுத்து ஆடிய டெல்லி அணி 37 ஓவர்களில் 154 ரன்களில் முடங்கியது. மூத்த வீரர் கவுதம் கம்பீர் (0) முதல் பந்திலேயே கேட்ச் ஆகிப் போனார்.