அபுதாபி,
குறைந்த தூரம் கொண்ட (25 மீட்டர்) நீச்சல் குளத்தில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் (பெங்களூரு) 48.65 வினாடியில் இலக்கை எட்டினார். அனைத்து தகுதி சுற்றுகளின் முடிவில் ஸ்ரீஹரி நடராஜ் 38-வது இடத்தை பிடித்தார். இதனால் இந்த தொடரின் அரையிறுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் இழந்தார்.
இருப்பினும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் குறைந்த தூரம் கொண்ட நீச்சல் போட்டிக்கான பிரிவில் வேகமாக இலக்கை அடைந்த இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீஹரி நடராஜ் பெற்றுள்ளார்.