

தனுசு ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி சில பொறுப்புகளையு,ம் சவால்களையும் ஒருசேரக் கொண்டு வருகிறது. உங்கள் ராசிக்கு 2 மற்றும் 3-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ‘அர்த்தாஷ்டமச் சனி’ என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமச் சனி தரும் பாதிப்புகளில் பாதியளவு இக்காலகட்டத்தில் ஏற்படும்.
குறிப்பாகத் தாயாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் செல்லும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதி என்பதால், பொருளாதார ரீதியாகப் பெரிய பாதிப்புகள் இருக்காது. மாறாகச் சொத்துச் சேர்க்கை, தன வரவு ஆகியவை உண்டாகும்.
குடும்பத்தில் சிறு குழப்பங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் தலைதூக்கலாம். பேச்சில் நிதானம் மிக முக்கியம். தேவையற்ற வாக்குவாதங்கள் பகையை உருவாக்கும். பொருளாதார நிலை உயர்வு இருக்கும். சிலருக்கு புதிய வீடு - நிலம் வாங்கும் யோகம் கைகூடும்.
பழைய வாகனத்தை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஜாமீன் கையெழுத்து போடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும். வீட்டுப் பராமரிப்புக்காக அதிகப் பணம் செலவாகும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு மட்டுமே பலன் கிடைக்கும். குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணியிட மாற்றம் அல்லது வெளியூர் பயணம் உண்டு.
தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்யும் போது மூத்த குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. வேலையில் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உங்கள் வளர்ச்சியை உறுதி செய்யும். வேலையில் இருப்பவர்களுக்குத் தற்காலிகமாக வேலைப்பளு காரணமாகக் குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழல் ஏற்படும்.
படிப்பில் மாணவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். படிப்பில் மந்தநிலை ஏற்படாமல் இருக்கத் திட்டமிட்ட நேர மேலாண்மை அவசியம். கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் போராட்டமான சூழல் இருந்தாலும், உங்களின் விடாமுயற்சி வெற்றியைக் கொடுக்கும்.
கலைஞர்கள் புதிய படைப்புகளை உருவாக்கும் போது காப்புரிமை போன்ற சட்ட விவகாரங்களில் கவனமாக இருக்கவும். கலைத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழை விடப் பொருளாதாரம் சம்பந்தமான சிக்கல்களே முக்கியமாக இருக்கும்.
தனுசு ராசியினர் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது அர்த்தாஷ்டமச் சனியின் வீரியத்தைக் குறைக்கும். இயன்றவரை சனிக்கிழமைகளில் 48 எள் தீபங்கள் ஏற்றி வழிபடுவது, புளியோதரை தானம் செய்வது ஆகியவை விசேஷமானது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் அவசியம். சனி மற்றும் வியாழக்கிழமைகளில் காகங்களுக்குச் எள் கலந்த சாதம் வைப்பது மன அமைதி தரும். அரசமர பிள்ளையாருக்கு மஞ்சள் நிற மலர்மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.
மகர ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி கனவுகளை நிறைவேற்றித் தருவதாக அமைகிறது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை வாட்டி வதைத்த ‘ஏழரைச் சனி’ இப்போது முழுமையாக முடிவுக்கு வருகிறது. சனி பகவான் உங்கள் ராசி நாதனாக இருப்பதால், இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு ராஜயோக பலன்களை வழங்கப் போகிறது.
இப்போது சனி பகவான் 3-ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு வருகிறார். இது ‘சகாயச் சனி’ எனப்படுகிறது. கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த அனைத்துக் கஷ்டங்களுக்கும் இப்போது ஒரு விடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும், முகத்தில் ஒரு புதிய பொலிவும், உற்சாகமும் தோன்றும்.
குடும்ப வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் பெருகும். சகோதர, சகோதரிகள் வழியில் நல்ல உதவியும் ஆதரவும் கிடைக்கும். பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். சேமிப்பு பலமடங்கு உயரும். சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.
மகர ராசியினருக்குப் புதிய ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்கும் யோகம் சித்திக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். இதுவரை பட்ட அவமானங்களுக்கு ஒரு விமோசனம் ஏற்படும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் கொடி உயர்ந்து பறக்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்குப் புதிய ஆர்டர்கள் வந்து குவியும்.
தொழிலை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்த இதுவே மிகச்சிறந்த தருணம். உங்களின் செயல்திறன் மற்றும் மேலாண்மைத் திறன் அனைவராலும் பாராட்டப்படும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.
கல்வியில் மாணவர்கள் சாதனை படைப்பார்கள். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வியில் இருப்பவர்களுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் புகழ் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்தி முன்னேறும் காலமிது.
கலைஞர்களின் படைப்புகள் மற்றும் கலைத் திறமைக்குத் தேசிய அளவிலான அங்கீகாரம், விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் பொருளாதார நிலை வெகுவாக முன்னேறும். வெளிநாடு சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள்.
மகர ராசியினர் சனிக்கிழமைகளில் தாயாருக்கு தாமரை மாலை அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது. உங்கள் ராசி நாதனான சனி பகவானுக்குத் தைலாபிஷேகம் செய்து வழிபடுவதும் உங்கள் அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும்.
வாழ்வியல் ரீதியாக, மற்றவர்களிடம் பணிவாக நடக்கும் பண்பை வளர்த்துக் கொள்வதும், சமூக சேவைகளை முன்னின்று செய்வதும் சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். குலதெய்வத்தை சனிக்கிழமைகளில் வழிபடுவது தொழில் ரீதியான வெற்றிகளைத் தரும். ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானம் செய்வது மன நிம்மதி தரும்.
கும்ப ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியின் இறுதிக்கட்டமான பாதச் சனியாக தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவான், இப்போது 2-ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு வருகிறார். இது ஏழரைச் சனியின் கடைசி கட்டம் என்பதால், கடந்த காலங்களில் நீங்கள் கற்ற பாடங்களை வைத்து வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டிய காலமாகும்.
ராசிக்கு 4, 8, 11 ஆகிய இடங்களை பார்க்கும் சனியால் பொருளாதார ரீதியாகப் பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. ஏனெனில் உங்கள் வார்த்தைகளே உங்களுக்குச் சில நேரங்களில் எதிர்ப்புகளை உருவாக்கும்.
குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வந்தாலும், விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதி காக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. பொருளாதார ரீதியாக, சுப காரியங்களுக்காகச் செலவுகள் அதிகமாகும். புதிய சேமிப்புகளைத் தொடங்குவது எதிர்காலத்திற்குப் பாதுகாப்பைத் தரும்.
கண்கள் அல்லது பற்கள் தொடர்பான சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் கறாராக இருப்பது நல்லது. எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் கூடாது.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் உழைப்பு அதிகமாக இருக்கும். வருமானத்திற்குப் பஞ்சமிருக்காது, ஆனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பிறரைப் பற்றி எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிப்பது கூடாது. அமைதி காக்கவும்.
தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளைச் செய்யும் போது நிதானமாகச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதில் தடை-தாமதங்கள் ஏற்படலாம். ஆனால், இறுதியாக வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக்கொள்வது அவசியம்.
கல்வியில் மாணவர்கள் சராசரியான பலன்களைப் பெறுவார்கள். படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கத் திட்டமிட்ட பயிற்சி அவசியம். கலைத்துறையினருக்குப் போராட்டத்திற்குப் பிறகே அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் பேச்சாற்றல் மூலம் நீங்கள் கலைத்துறையில் சாதிக்க முடியும்.
ஊடகம் மற்றும் கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டியிருந்தாலும், உங்களின் திறமை உங்களைக் கைவிடாது. இசைத்துறை மற்றும் மேடைப் பேச்சாளர்களுக்கு இக்காலம் ஓரளவுக்கு வருமானத்தைத் தரும். முயற்சிக்கு ஏற்ற பலன்கள் உண்டு.
கும்ப ராசியினர் சனிக்கிழமைகளில் பிள்ளையார் வழிபாடு செய்வதுடன், சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சிவபெருமானை வலம் வந்து வழிபட வேண்டும். ஏழைகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளைத் தானமாகக் கொடுப்பதும் பல தோஷங்களை நீக்கும்.
வாழ்வியல் ரீதியாக, அதிகமான பேச்சுகளைக் குறைத்துக் கொண்டு செயலில் வேகம் காட்டுவது வெற்றி தரும். பெரியோர்களை வணங்கி, மதித்து நடப்பது சனியின் அருளை உங்களுக்கு முழுமையாகப் பெற்றுத் தரும். பசுக்களுக்கு வெல்லம் கலந்த அரிசியை ஊட்டுவது குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டும்.
மீன ராசி நேயர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டமான ‘ஜென்மச் சனியாக’ தொடங்குகிறது. உங்கள் ராசிக்கு 11 மற்றும் 12-ம் இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், இப்போது உங்கள் ராசியிலேயே அமர்கிறார். இது ஒரு பொறுப்புகள் நிறைந்த காலமாகும். அவரது பார்வை 3, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் பதிகிறது.
நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய குடும்ப மற்றும் தொழில் கடமைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது மந்தநிலை ஏற்படும். எனவே உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் தேவை. அலைச்சல்கள் அதிகரித்தாலும், உழைப்பிற்கேற்ற உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
குடும்ப உறவுகளில் பொறுமை காப்பது மிகவும் அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்த்து, அவர்களை அரவணைத்துச் செல்லவும். பொருளாதார ரீதியாக, செலவுகள் அதிகமாக இருந்தாலும், உங்களின் சமயோசித புத்தியால் பற்றாக்குறை நிலைமையைச் சமாளிப்பீர்கள்.
மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஆன்மீகத்தல பயணங்கள் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுவது நல்லது. வரும் ஜூன் மாதம் கடகத்தில் சஞ்சரிக்கும் உச்ச ராசிநாதனால் பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற சுபச் செலவுகள் ஏற்படும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். வேலையில் கூடுதல் சுமை இருந்தாலும், உங்கள் திறமை மேலதிகாரிகளால் கவனிக்கப்படும். சோம்பலைத் தவிர்த்துச் சுறுசுறுப்பாகச் செயல்படுவது உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானது.
தொழிலதிபர்கள் புதிய மாற்றங்களைச் செய்யும் போது அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். கூட்டுத் தொழிலில் சில சவால்கள் வந்தாலும், நேர்மையான அணுகுமுறை வெற்றியைக் கொடுக்கும். உங்களின் உழைப்பு மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் காலம் இது.
கல்வியில் மாணவர்கள் அதிக ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். ஞாபக மறதியைத் தவிர்க்கத் தொடர்ந்து எழுதிப் பார்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குப் போராட்டமான சூழல் நிலவினாலும், உங்களின் படைப்புத் திறன் உங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும்.
கலைஞர்களுக்குப் புதிய வசதிகள் மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய கலைகளைக் கற்பதில் ஆர்வம் காட்டுவதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெற முடியும். சிறிய வாய்ப்பாக இருந்தாலும் தட்டிக் கழிக்காமல் ஏற்கவும்.
மீன ராசியினர் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபடுவது ஜென்மச் சனியின் பாதிப்பைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் மீன்களுக்கு பொரி அல்லது கோதுமை உருண்டை அளிப்பதும், எறும்புகளுக்கு பச்சரிசி வைப்பதும் மிகச்சிறந்த பரிகாரமாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் நிதானமாகச் செயல்படுவது அவசியம். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், முதியவர்களுக்கு உதவுவதும் உங்கள் வாழ்வை வளமாக்கும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, கருவறையை வலம் வந்து வழிபடுவது நன்மை தரும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராமன்