

சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் (மே) இறுதி வரையில் ஏற்ற-இறக்கத்துடன் நீடித்தது. அதன் பின்னர் இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவை சந்திக்க தொடங்கியது.
இது கடந்த 8-ந்தேதி வரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. திடீரென்று நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்தது. மீண்டும் ஏறுமுகத்தில் இருக்குமோ? என நினைத்த நேரத்தில் நேற்று அதிரடியாக சரிந்து காணப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,500-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொடர் விலை குறைவை பார்க்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,000-ம், சவரனுக்கு ரூ.8,000-ம் குறைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தை டாலரிலேயே வாங்குகிறார்கள். இதர நாட்டு பண மதிப்பில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிக செலவை ஏற்படுத்தும் என கருதி முதலீட்டை குறைத்துள்ளனர்.
இது உலகளவில் தேவையை குறைத்து விலையையும் சரிய வைத்திருக்கிறது. நகை மீதான ஆர்வலர்களுக்கும், சுபகாரியங்களுக்காக நகை எடுக்க காத்திருப்பவர்களுக்கும் இந்த விலை வீழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமின்றி நேற்றையவிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000 (இன்று)
10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400 (நேற்று)
09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600
06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600