கங்கனா ரணாவத்தின் 'குயின் 2' சட்ட சிக்கலில்... ரூ.250 கோடி இழப்பீடு கோரி வழக்கு

'குயின் 2' படம் உரிய அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, பேன்டம் ஸ்டுடியோஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

கங்கனா ரணாவத்தின் 'குயின் 2' சட்ட சிக்கலில்... ரூ.250 கோடி இழப்பீடு கோரி வழக்கு
Published on

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் 'குயின் 2' திரைப்படம் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. 2014-ஆம் ஆண்டு வெளியான 'குயின்' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இந்தப் படம், உரிய அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, பேன்டம் ஸ்டுடியோஸ் (PhantomStudios) நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

'குயின்' படத்தின் உரிமை மீறப்பட்டதாக குற்றச்சாட்டு

வழக்கு மனுவில், 'குயின்' திரைப்படத்தின் அறிவுசார் சொத்துரிமையில் பேன்டம் ஸ்டுடியோஸுக்கு 50 சதவீத உரிமை இருப்பதாகவும், அந்தப் படத்தின் தொடர்ச்சி அல்லது அதனை அடிப்படையாகக் கொண்ட எந்தத் திரைப்படத்தையும் தயாரிக்க தங்களது ஒப்புதல் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அனுமதியைப் பெறாமல் ஜியோஸ்டார் நிறுவனம் 'குயின் 2' திரைப்படத்தை தயாரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கவும், ரூ.250 கோடி இழப்பீடு வழங்கவும் கோரி பேன்டம் ஸ்டுடியோஸ் ஐகோர்ட்டை அணுகியுள்ளது.

'இது தொடர்ச்சி அல்ல' - ஜியோஸ்டார் விளக்கம்

இதற்கு பதிலளித்துள்ள ஜியோஸ்டார் நிறுவனம், 'குயின் 2' என்பது முற்றிலும் புதிய மற்றும் சுயாதீனமான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம் என்றும், 2014-ல் வெளியான 'குயின்' படத்துடன் கதை, கதாபாத்திரம் அல்லது படைப்பாற்றல் ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், 'Queen' என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல் என்பதால், அந்தப் பெயருக்கு எந்த ஒரு நிறுவனமும் தனிப்பட்ட உரிமை கோர முடியாது என்றும் ஜியோஸ்டார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது மும்பை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் படத்தின் வெளியீட்டு திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி பாலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

2014-ல் வெளியான சூப்பர் ஹிட் படம்

'குயின்' திரைப்படம், 2014-ஆம் ஆண்டு விகாஸ் பஹல் இயக்கத்தில், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் வெளியான பாலிவுட் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். இதில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்திருந்தார். லிசா ஹெய்டன் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், கங்கனா ரணாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 'குயின் 2' தொடர்பான வழக்கு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com