

மும்பை,
சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஒரு சுவாரசியமான சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து பேசியபோது ஏற்பட்ட தவறுக்காக நடிகர் ராம் சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ராம் சரண் , நடிகை ஜான்வி கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களை ஒரு வார்த்தையில் விவரிக்குமாறு ராம் சரணிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
சச்சின் – "ஜாம்பவான்"
தோனி – "அமைதியானவர் மற்றும் கூலானவர்"
விராட் – "நெருப்பு"
ரோகித் சர்மா – "எல்லோருக்குமான மனிதர்" என கூறினார்.
ஆனால், ஜஸ்பிரித் பும்ராவைப் பற்றி பேசும்போது, கிரிக்கெட் வீரருக்குப் பதிலாக தவறுதலாக கால்பந்து வீரர் என குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராம் சரண், "சில நேரங்களில் பெயர்கள் மறந்துவிடுகின்றன. இந்த குழப்பத்திற்காக ஜஸ்பிரித் பும்ராவிடம் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். இது மனித இயல்பால் ஏற்பட்ட தவறு இது" என்று குறிப்பிட்டார். மேலும், பும்ராவின் ஆட்டத்திற்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் தெரிவித்துள்ளார்.