

சென்னை,
சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், நடிகர்-நடிகைகள் வருவாய் பகிர்வு முறையில் (ரெவின்யூ ஷேர்) நடிக்க முன்வர வலியுறுத்தும் வகையில் முதற்கட்டமாக அடையாள வேலைநிறுத்தம் செய்யபோவதாகவும், சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து 'நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை. எனவே இந்த தன்னிச்சையான வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு (மே 4-ந்தேதி) இரு அமைப்பு பிரதிநிதிகளும் சந்தித்து, அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பேசி தீர்மானிக்கலாம்', என நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், '2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை முன்னணி நடிகர்கள் வருவாய் பகிர்வு முறையில் நடிக்கவேண்டும் என்று தெரியப்படுத்தியும், நடிகர் சங்கம் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. எனவேதான் தற்போது நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இது தெரியாது என்று கூறுவது ஏற்புடையதல்ல.
தற்போது இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடி பேச்சுவார்த்தைக்கு நீங்கள் வரும் பட்சத்தில் வேலைநிறுத்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்றும், பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணித்தால் அடையாள வேலைநிறுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.