

காஞ்சிபுரம்,
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் பெருமாளை ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு 'அத்திகிரி' என்றும் பெயரும் உண்டு. வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களாக 3-ம் நாள் கருட சேவை உற்சவமும், 7-ம் நாள் தேரோட்டமும், 9-ம் நாள் தீர்த்தவாரி உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் சிறப்பு மிக்க வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மேளங்கள் முழங்க, 'கோவிந்தா' கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் அதிகாலை 3 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து அதிர்வெட்டுக்கள் முழங்க ராஜ நடையுடன் தேவாதி தேவன் தேவராஜன் கோலத்தில் 100 டன் எடையும் 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளை உடைய தேரில் எழுந்தருளி காஞ்சீபுரம் நகரில் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சீபுரத்தில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். பெருமாள். வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயனித்து கிடந்தார்.
இதனால் அவரை தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் வரதராஜர் என்று பெயர் பெற்றார். பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு. யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.
பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த கோவிலில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர். ஒரு ஏழையின் திருமணத்துக்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னதியில் தங்க மழை கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக இது திகழ்கிறது.
ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் 2 மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சீபுரம் சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார்.
இதையடுத்து இவரும் இத்தலம் வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள் என்று அருளினார். அதன்படி இந்த கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்குகிறார்கள்.