

திருவண்ணாமலை,
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னையை சேர்ந்த திருவண்ணாமலை திருக்குடைகள் சமர்ப்பண அறக்கட்டளை சார்பில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 5 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 24-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த திருவண்ணாமலை திருக்குடைகள் சமர்ப்பண அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 5 திருக்குடைகள் அருணாசலேஸ்வரர் கோவிலில் காணிக்கையாக வழங்கப்பட்டது.
24 அடி அகலத்தில் ஒரு குடை, 12 அடி அகலத்தில் 2 குடைகள் மற்றும் 8 அடி அகலத்தில் 2 குடைகள் என 5 திருக்குடைகளை, கைலாய வாத்தியங்கள் முழங்க சிவ பக்தர்கள் நடனமாடிய படியும், கோலாட்டம் ஆடிய படியும் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் சங்கர், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கடந்த 9-ந் தேதி திருவள்ளுவர் மாவட்டத்தில் திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் வழியாக நேற்று திருவண்ணாமலையை அடைந்ததும், திருக்குடைகள் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. மாட வீதிகளில் அருணாசலேஸ்வரர் உலா வரும்போது வாகனத்தில் இந்த திருக்குடைகள் கட்டப்படும்.