

மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் கோவில் தொன்மைமிக்க கோவில் ஆகும். பல்வேறு சிறப்புக்குரிய இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா காட்சியும் விமரிசையாக நடைபெறும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று காலை ஸ்ரீமகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் பால் காவடி, செடல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. தேவங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.