

மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயூரநாதர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினசரி பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. 25ஆம் தேதி சகோபுர தரிசனம், 27ஆம் தேதி திருக்கல்யாணம், 29ஆம் தேதி திருத்தேரோட்டம், 30ஆம் தேதி வைகாசி விசாக பௌர்ணமி தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான தெப்ப உற்சவம், கோவில் திருக்குளமான பிரம்மதீர்த்தத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, மயூரநாதர், அபயாம்பிகை மற்றும் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சோடஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தெப்ப உற்சவம் தொடங்கியது.
தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி, கோயில் திருக்குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.