நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது.. கொழுப்பை குறைக்க எந்த பயிற்சி அதிக பலன் தரும்?

எந்த வயதினரும் எளிதாக, பாதுகாப்பாக செய்யக்கூடிய பயிற்சியாக நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது.
உடலில் சேரும் கொழுப்பை குறைக்கவும், கூடுதல் கலோரிகளை எரிக்கவும் எளிய பயிற்சியை நாடுபவர்களுக்கு நடப்பதும், படிக்கட்டுகளில் ஏறுவதும் பயனுள்ளதாக இருக்கும். அதில் கொழுப்பை குறைப்பதற்கு எது அதிக பலன் தரும்? என்பதை பார்ப்போம்.
நடப்பது
எளிய உடற்பயிற்சியாக விளங்கும் நடைப்பயிற்சி உடலிலுள்ள கொழுப்பை குறைக்க உதவும். அதிலும் வேகமாக நடப்பது இதயத்துடிப்பை அதிகரிக்க செய்து அதிக கலோரிகளை எரிக்க துணைபுரியும். உடலில் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே, எந்த வயதினரும் எளிதாக, பாதுகாப்பாக செய்யக்கூடிய பயிற்சியாக நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது.
படிக்கட்டுகளில் ஏறுவது
நடப்பதுடன் ஒப்பிடும்போது படிக்கட்டுகளில் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும் இடுப்பு பகுதி, கால் தசைகள் மற்றும் உடலின் மைய தசை பகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதிக கலோரிகளை எரிக்க உதவும். அதனால் வேகமாக கொழுப்பை குறைக்க முடியும். கால்களுக்கு வலிமையையும், உடலுக்கு சக்தியையும் அளிக்கும்.
எது அதிக கலோரிகளை எரிக்கும்?
படிக்கட்டுகளில் ஏறுவதற்கு அதிக சக்தி தேவைப்படுவதால் அதிக கலோரிகளை எரிக்கச்செய்யும். நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை மெதுவாக எரிக்க உதவிடும் என்றாலும் அதிக சோர்வு இல்லாமல் நீண்ட நேரம் செய்ய முடியும். அதற்கேற்ப கலோரிகளும் எரிக்கப்பட்டு விடும். மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இது கால்களுக்கு அழுத்தம் தராது.
எந்த உடல்நல பிரச்சினையுமின்றி இருப்பவர்கள், வேகமாக கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் படிக்கட்டுகளில் ஏறும் வழக்கத்தை பயிற்சியாக மேற்கொள்ளலாம்.
எனினும் ஒவ்வொருவரின் உடல்நிலை, கொழுப்பை குறைக்கும் இலக்கு, வயது மற்றும் ஆரோக்கிய நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எந்த பயிற்சியை மேற்கொள்வது என உடற்பயிற்சி நிபுணருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது நல்லது.






