புதுடெல்லி,
டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனஜ் மண்டி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது.
அதில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், முறையான அனுமதி பெறாமல், அவை சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழும் பெறவில்லை.
அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் சிலர், அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. அப்போது, தொழிலாளர்கள் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
தீயுடன் எழுந்த கரும்புகையால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் தீயில் சிக்கினர். சிலர் மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையே, காலை 5.20 மணியளவில் தீயணைப்பு படைக்கு தகவல் கிடைத்தது. உடனே சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், குறுகலான சந்து பகுதியில் அந்த கட்டிடம் அமைந்து இருந்ததால், தீயணைப்பு வீரர்களுக்கு மீட்புப்பணி கடினமாக இருந்தது. அவர்கள் சன்னல் கம்பிகளை துண்டித்துத்தான் உள்ளே நுழைய முடிந்தது.
காற்றோட்ட வசதியே இல்லாததால், தொழிலாளர்கள் சிலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். உள்ளே சிக்கி இருந்த 63 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மயங்கி கிடந்தவர்களை தங்கள் முதுகில் சுமந்து வெளியே கொண்டு வந்தனர்.
ஆனால், அந்த இடத்துக்கு பொதுமக்களும், அரசியல் வாதிகளும் திரண்டு வந்ததால், மீட்புப்பணி மிகவும் சிக்கலாகி விட்டது.
சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகி பலியானார்கள். தூக்கத்திலேயே அவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில், 34 பேர் இறந்தனர். எனவே, சாவு எண்ணிக்கை 43 ஆனது. பலியானவர்களில் 15 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
தீவிபத்தை தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெல்லி அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது
அந்த இடத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 304-வது பிரிவின்கீழ் (எதிர்பாராமல் நடந்த கொலை) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.