இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை தின்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

மும்பையில் நடந்த இரவு இசை நிகழ்ச்சி ஒன்றில், தென்மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை தின்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
Published on

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ மைதானத்தில் சம்பவத்தன்று இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதில் தென்மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் 15 பேரும் கலந்து கொண்டனர்.

இசை நிகழ்ச்சியின்போது மாணவர் ஒருவர் சக மாணவர்களுக்கு 'எக்ஸ்டசி' எனப்படும் போதை மாத்திரையை வழங்கினார். அதை உட்கொண்ட மாணவர்கள் நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சியில் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். இந்த நிலையில் போதை மாத்திரை உட்கொண்ட 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கோரேகாவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயது மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல பாம்பே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது மாணவியின் உயிரும் பறிபோனது. மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை தின்றதால் இந்த விபரீதம் நடந்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த சக மாணவர்கள் 2 பேர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை நாளை (வியாழக்கிழமை) வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை பயன்படுத்திய மாணவர், மாணவி அடுத்தடுத்து பலியான சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com