டெல்லி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் புராரி பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாட்டிற்குள் சிக்கியிருப்பவர்களை நேற்றிலிருந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மேலும் இந்த இடிபாட்டில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் அனில் குப்தா(42), எம்டி சர்பராஸ்(22) மற்றும் எம்டி காதர்(40) என அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் மீட்கப்பட்டவர்களில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனா். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.