22 லட்சம் பேர் எழுதிய ‘நீட்’ தேர்வு ரத்து: வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ.

வினாத்தாள் கசிவு எதிரொலியாக, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
image Courtacy: PTI
image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

மிகக்கடுமையான, கட்டுப்பாடுகள், சோதனைக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர்வில் முறைகேடு நடந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவல் அதிர்ச்சியை கிளப்பியது. ராஜஸ்தான் மாநிலத்தில் 'கெஸ் பேப்பர்' என்ற பெயரில் வினாத்தாள் கசிந்ததும், அதில் இருந்து சுமார் 600 மதிப்பெண்களுக்கு மேல் வினாக்கள் ஒத்துப்போனதும் பேசுப்பொருளானது.

இதையடுத்து தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை உடனடியாக விசாரணையை தொடங்கியது. மத்திய முகமைகளுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி தேசிய தேர்வு முகமை இந்த விசாரணை முடுக்கிவிட்டிருந்தது. அதுதொடர்பான விளக்கத்தை கடந்த 10-ந்தேதியன்று தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி இருந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக என்.டி.ஏ. நேற்று அதிரடியாக அறிவித்தது.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப் பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் கொண்டுள்ள நிலையான உறுதிப்பாட்டுக்கு இணங்க, நீட் தேர்வு விவகார நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு என்.டி.ஏ. பரிந்துரைத்திருந்தது. மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து என்.டி.ஏ. ஆய்வு செய்த தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும், இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், மத்திய அரசின் ஒப்புதலுடன், தேசியத் தேர்வு முகமை ஒரு முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 3-ந்தேதி நடத்தப்பட்ட நீட் (யு.ஜி.) தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த தகவல்களையும், சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது, தற்போதைய தேர்வு நடைமுறையை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க இயலாது. தேர்வு மீண்டும் நடத்தப்படும் தேதி மற்றும் அதற்கான புதிய ஹால்டிக்கெட் வெளியீடு குறித்த அட்டவணை வரும் நாட்களில் என்.டி.ஏ. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க மத்திய அரசு மேலும் ஒரு முடிவை எடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், ஆவணங்களையும், உதவிகளையும் வழங்கி என்.டி.ஏ. முழுஒத்துழைப்பை வழங்கும்.

தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால், தேர்வர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சிரமங்கள் ஏற்படும் என்பதை என்.டி.ஏ. நன்கு உணர்ந்துள்ளது. இத்தகைய பின்விளைவுகளை என்.டி.ஏ. சாதாரணமாக கருதவில்லை. இந்த தேர்வுக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதி நிலை மற்றும் அவர்களால் தேர்வுசெய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். இதற்குப் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. மேலும், கூடுதல் தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மேலும், மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்கு திருப்பியளிக்கப்படும்.

மேலும் இதுதொடர்பான விவரங்களை neet-ug@nta.ac.in என்ற இணையதளத்தையோ, 011-40759000, 011-69227700 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்காக சி.பி.ஐ.யிடம் வழக்கை மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. நேற்று வழக்குப்பதிவு செய்தது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குனர் அபிஷேக் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு ரத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். தேர்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. நீட் மறுதேர்வு குறித்து எனது குழுவுடன் அமர்ந்து ஆலோசனை நடத்துவேன். இன்னும் 7 அல்லது 10 நாட்களில், மறுதேர்வுக்கான முழு கால அட்டவணையும் அறிவிக்கப்படும்.

அப்போதுதான் கல்வியாண்டும், மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். எந்த தவறும் இன்றி மறுதேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com