ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம்

கடந்த ஆண்டு ஏலத்தில் எம்.எப்.ஹுசைனின் கிராம யாத்திரை என்ற ஓவியம் ரூ.118 கோடிக்கும் மேல் விலைபோன சாதனையை ராஜா ரவிவர்மாவின் யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா ஓவியம் முறியடித்துள்ளது.
ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ரூ.167 கோடிக்கு ஏலம்
Published on

மும்பை,

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியமான 'யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா' ஓவியம் மும்பையில் உள்ள நிறுவனத்தின் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி இந்திய கலை படைப்புகளில் அதிக மதிப்புள்ள படைப்பாக சாதனை படைத்துள்ளது. இந்த ஓவியம், யசோதா ஒரு பசுவிடம் பால் கறக்க, குழந்தை கிருஷ்ணர் பின்னால் இருந்து ஒரு பால் கோப்பையை எடுக்க முயல்வதை சித்தரிக்கிறது.

கடந்த ஆண்டு ஏலத்தில் எம்.எப்.ஹுசைனின் 'கிராம யாத்திரை' என்ற ஓவியம் ரூ.118 கோடிக்கும் மேல் விலைபோன சாதனையை இந்த ஓவியம் முறியடித்துள்ளது. ராஜா ரவிவர்மாவின் இந்த ஓவியத்தை, கொரோனா பாதிப்பின்போது 'கோவிஷீல்டு' தடுப்பூசி கொண்டு வந்த சீரம் நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பூனாவாலா வாங்கினார். புகழ்பெற்ற ராஜா ரவிவர்மாவின் யசோதை மற்றும் கிருஷ்ணன் ஓவியத்தை பாதுகாத்து, பராமரிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன்' என பூனாவாலா கூறினார்.

ஏலத்தில் சாதனை:

இதுகுறித்து ஏல நிறுவன தலைவர் மினல் வஜிராணி கூறியதாவது:

ஓவியர் ராஜா ரவிவர்மாவின் கலைப்பயணம் உச்சத்தில் இருந்த 1890-களில் வரையப்பட்ட இந்த படைப்பு, குழந்தை வடிவ கிருஷ்ண பகவானையும், அவரது வளர்ப்பு தாயான யசோதாவையும் மையமாக கொண்டு, தாய்மையின் அன்பை மிக நுணுக்கமான முறையில் சித்தரிக்கிறது. இக்காட்சி பார்வையாளர்களை தன்வயப்படுத்தி. ஒரு சாதாரண இல்லற தருணத்தை, ஒரு பரந்த மற்றும் புனிதமான புராண நிகழ்வில் பங்கேற்பது போன்ற ஓர் அனுபவமாக உருமாற்றுகிறது.

ராஜா ரவிவர்மாவின் படைப்புகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், உணர்வுகளை தூண்டக்கூடியதாகவும் அமைந்த படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சிறந்த கலைப்படைப்புகள், தங்கள் காலத்தால் அழியாத மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் தனித்துவமான இயல்பைக் கொண்டுள்ளன. ரூ.80 முதல் ரூ.120 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.167 கோடியை தாண்டி இந்த ஓவியம் ஏலம் போனது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com