எம்.பி. ஆனாலும் ஒரு தொண்டராக தொடர்ந்து செயல்பட வேண்டும் - பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

எம்.பி. ஆனாலும், மந்திரி ஆனாலும் ஒரு தொண்டராக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
Published on

புதுடெல்லி,

பா.ஜனதா எம்.பி.க்களுக் கான 2 நாள் பயிற்சி முகாம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியது. முக்கியமாக புதிய எம்.பி.க்களுக்கு அவர்களது உரிமைகள், கடமைகள் மற்றும் விவாதங்களில் பங்கேற்பது, கேள்வி எழுப்புதல் போன்ற அவை நடவடிக்கைகளில் தங்கள் செயல்பாட்டை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

அதேபோல கட்சியின் கொள்கைகள் குறித்தும் எம்.பி.க்களுக்கு பல்வேறு தலைவர்கள் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். இந்த பயிற்சி முகாமில் உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி முகாமை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சி இயற்கையான ஒரு அமைப்பு, கூட்டப்பட்ட அமைப்பு அல்ல. கட்சியின் கொள்கைகளாலும், எண்ணங்களாலும் தான் இந்த இடத்துக்கு கட்சி வந்துள்ளது, ஒரு குடும்பத்தின் வாரிசுகளால் அல்ல.

நீங்கள் எம்.பி. ஆனாலும், மந்திரியாக ஆனாலும் உங்களுக்குள் உள்ள கட்சி தொண்டன் தொடர்ந்து எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். வயது வித்தியாசத்தை கடந்து நீங்கள் எப்போதும் ஒரு மாணவனாகவே இருக்க வேண்டும். அப்போது தான் தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக மக்களவை, மாநிலங்களை பா.ஜனதா உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், சனி, ஞாயிறு ஆகிய இந்த 2 நாட்களும் அனைவரும் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com