கேரள பயணத்தை ரத்து செய்தார் கவர்னர் அர்லேகர்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.
கேரள பயணத்தை ரத்து செய்தார் கவர்னர் அர்லேகர்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை. அத்துடன், தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகர் இன்று கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பொறுப்பு கவர்னர் அர்லேகர் தனது கேரள பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், கவர்னரின் கேரள பயணம் திடீரென ரத்தாகியுள்ளது தற்போது கவனம் பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com