

மதுரை,
தமிழகம் முழுவதும் கனிமவளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து நடத்திய சோதனையில் மதுரையில் விதிமீறலில் ஈடுபட்ட 11 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக கனிமவளத் துறை அமைச்சர் பிரபு உத்தரவின் பேரில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள் மற்றும் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா என்பதை கண்டறிய தாலுகா வாரியாக அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தரைவழி மற்றும் துல்லியமான ட்ரோன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வுகளில், அரசு விதித்த நிபந்தனைகளை மீறி, குத்தகை எல்லைக்கு அப்பாலும், அனுமதிக்கப்பட்ட ஆழத்தை தாண்டியும் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவை முழுமையாகக் கணக்கிட்ட பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதேபோன்று கடந்த சில நாட்களில் தென்காசியில் 18 குவாரிகளும், விருதுநகரில் 23 குவாரிகளும் விதிமீறல் புகார்களின் அடிப்படையில் மூட உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.