அரியலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு: பெ.சண்முகம் வலியுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் செப்டிக்டேங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்ததற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்
Published on: 

சென்னை,

அரியலூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு; இரங்கல்

அரியலூர் மாவட்டம், செந்துறை காந்திநகரில் ம.சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் செப்டிக்டேங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செந்துறை காந்திநகரைச் சேர்ந்த ராமச்சந்திரன், திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த பாஸ்கர், திருவாரூர் மாவட்டம், கைலாசநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த தினகரன் ஆகிய 3 தொழிலாளர்களும் விஷவாயு தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த துயரச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை இன்னமும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. இந்த குறிப்பிட்ட மரணங்கள் தொடர்பான வழக்கை "2013-ம் ஆண்டின் கையால் மலம் அள்ளுவோர் பணியமர்த்தல் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம்" (PEMSR Act, 2013) படி வழக்குப்பதிவு செய்திட வேண்டும். மேலும் இச்சட்டத்தின் படி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com