திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று அமித்ஷா வருகை: 3 அடுக்கு பாதுகாப்புடன் போலீசார் குவிப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு மத்திய மந்திரி அமித்ஷா செல்ல உள்ளார்.
திருவண்ணாமலை கோவிலுக்கு இன்று அமித்ஷா வருகை: 3 அடுக்கு பாதுகாப்புடன் போலீசார் குவிப்பு
Published on

திருவண்ணாமலை,

மத்திய மந்திரி அமித்ஷா இன்று திருவண்ணாமலைக்கு வருகிறார். இதனையொட்டி திருவண்ணாமலையில் டிரோன்கள் பறக்க 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி மராட்டிய மாநில நிகழ்ச்சிகளை இன்று (சனிக்கிழமை) முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு இன்று மாலை 4.20 மணியளவில் வருகிறார்.

அருணாசலேஸ்வரர் கோவில்

ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.

ஹெலிகாப்டர் ஒத்திகை

இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் கிரிவலப்பாதை உண்ணாமலை அம்மன் நகரில் உள்ள ஹெலிபேடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

நேற்று இந்த ஹெலிபேடுகளில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை மேம்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலெக்டர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களுடனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ரமண ஆசிரமம்

அதன்பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து ரமண ஆசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு செல்லும் சாலை மார்க்கம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ரமண ஆசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கான போலீசார்

இந்த நிலையில் மேற்படி இடங்கள், ஹெலிபேடு மற்றும் குறிப்பிட்ட மிக முக்கிய நபர் பயணிக்கும் வழியின் சுற்றுப்புறங்களில் டிரோன்கள், ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா வான்வழி வாகனங்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் பொது பாதுகாப்பின் நலனுக்காகவும், மத்திய உள்துறை மந்திரியின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இன்றும், நாளையும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்து உள்ளார்.

மத்திய மந்திரி அமித்ஷா இன்று திருவண்ணாமலை வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்புடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com