சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை வரவேற்பு

வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளங்களை மத்திய பட்ஜெட் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை வரவேற்பு
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையோடும், நமது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அயராத உழைப்போடும் உருவாக்கப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் சிறு நிறுவனங்கள், தொழில்துறையினர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

மொத்த பட்ஜெட்டின் செலவினம், ரூ.53.5 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது நாட்டின் முதலீடு அளவை காட்டுகிறது. 2026-27ம் ஆண்டிற்கான மூலதனச் செலவு ரூ.12.2 லட்சம் கோடி என்ற இதுவரையில்லாத அளவை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் வளர்ச்சியை மேம்படுத்தி, புதிய சாலைகள், ரெயில் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

அடுத்துவரும் 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டில் 'பயோபார்மா சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, இந்தியாவை ஒரு உலகளாவிய பயோபார்மா மையமாக மாற்றி, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும்.

Also Read
மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்
சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை வரவேற்பு

சிறு நிறுவனங்கள் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, நமது சிறு நிறுவனங்கள் தேசிய அளவிலும், உலக அளவிலும் முன்னணி நிறுவனங்களாக மேம்படவும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உத்வேகமாக நமது சிறு, குறு நிறுவனங்கள் செயல்படவும் உதவியாக அமையும்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அமைக்கப்படும் அரிய வகை கனிம வழித்தடங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத்துறைக்குத் தேவையான முக்கிய கனிமங்கள் சார்ந்த சுரங்கப்பணிகள், பதப்படுத்துதல் மற்றும் உற்பத்திக்கு ஆதரவளிக்கும்.

Also Read
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை வரவேற்பு

மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.40,000 கோடியாக உயர்த்தப்படுவது, “Make In India” திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு ஒரு வலுவான உத்வேகத்தை அளிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படவுள்ள 20 புதிய தேசிய நீர்வழிகள் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாட்டின் உட்கட்டமைப்பு நவீனமயமாவதை உறுதி செய்யும்.

சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-ஐதராபாத் உட்பட ஏழு அதிவிரைவு ரெயில் வழித்தடங்கள், நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களுக்கு இடையே பசுமை போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். நமது பட்ஜெட்டில், தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் உட்பட நாட்டின் 15 தொல்லியல் இடங்களை கலாசார மையங்களாக மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் செழிப்பான நாகரிகத்தை உலகிற்கே நாம் பறைசாற்ற முடியும்.

Also Read
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் - அண்ணாமலை வரவேற்பு

இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தென்னை மேம்பாட்டுத் திட்டம், பழைய மரங்களைப் புத்துயிர் பெறச்செய்து, அதன் உற்பத்தியை அதிகரித்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தென்னை சாகுபடியை சார்ந்துள்ள சுமார் 1 கோடி தென்னை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும்.

நமது நாட்டின் முந்திரி மற்றும் கோகோவிற்கான பிரத்யேகத் திட்டங்கள் மூலம், ஏற்றுமதி மேம்படுவதோடு, 2030-க்குள் "இந்திய முந்திரி" மற்றும் "இந்திய கோகோ" ஆகியவற்றை உலகளாவிய பிராண்டுகளாக உருவாக்க முடியும். நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் வழங்கி, விஸ்தார் என்ற செயற்கை நுண்ணறிவு உதவியோடு வேளாண் ஆலோசனைகளை வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நமது பலமிக்க இளைஞர் சக்தியை மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வைக் கொண்ட நடவடிக்கையாக, 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC ஆய்வகங்கள் அமைப்பதன் மூலம், Content Creation குறித்த பாடங்களை அறிமுகப்படுத்தவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நமது மாணவர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

'SHE-மார்ட்ஸ்' (SHE-Marts) திட்டமானது, பெண்களை சுயஉதவிக் குழுக்களிலிருந்து, சுயதொழில் செய்யும் தொழில்முனைவோராக முன்னேற்ற உதவும். கிராமப்புற பெண்களால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஊக்கமளிக்கும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த கல்வி நிறுவனங்களுக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாணவியர் விடுதி அமைக்கப்படுவது, நமது பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக உயர்தர தொழில்நுட்பக் கல்வி கற்க உதவியாக இருக்கும்.

16-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு 41 சதவீத நிதிப் பகிர்வு என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 2026-27ம் ஆண்டில் நிதிக் குழு மானியமாக ரூ.1.4 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு வழங்குகிறது.

17 புற்றுநோய் மருந்துகள் மற்றும் பிற அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், புற்றுநோய் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்கான மருத்துவ செலவு வெகுவாக குறையவுள்ளது. சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாகன விபத்து காப்பீட்டிற்கு இனி வரி விதிக்கப்படாது. இது நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும்.

வளர்ச்சி மற்றும் நலத்திட்டச் செலவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதே வேளையில், கடன்-ஜிடிபி விகிதம் 56.1 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாகக் குறைந்துள்ளது மற்றும் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.3 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இது பொதுமக்களை மையமாகக் கொண்ட, சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்திடும் பட்ஜெட் திட்டமாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளங்களை நமது மத்திய அரசின் இந்தாண்டிற்கான பட்ஜெட் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com