இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் ‘சீ விஜில்-26’ பயிற்சி நிறைவு

கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கண்காணிப்பு, ரோந்து மற்றும் எதிர்வினை திறன்கள் சோதிக்கப்பட்டன.
இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் ‘சீ விஜில்-26’ பயிற்சி நிறைவு
Published on: 

சென்னை,

இந்தியா தழுவிய கடற்கரை பாதுகாப்பு பயிற்சி ‘சீ விஜில்-26’ நிறைவு பெற்றது. இது தொடர்பாக, சென்னை பாதுகாப்பு துறை மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

சீ விஜில்-26

இந்தியா முழுவதும் உள்ள நீண்ட கடற்கரைகளில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியான ‘சீ விஜில்-26’-ன் ஐந்தாவது பதிப்பு 26 நவம்பர் 2026 அன்று நிறைவடைந்தது.

மாநில அமைப்புகள்

இந்திய கடற்படையின் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், மத்திய மற்றும் மாநில அமைப்புகள் ஒன்றிணைந்து, நாட்டின் கடற்கரை பாதுகாப்பு கட்டமைப்பின் செயல்திறனை சோதித்து பார்த்தன.

கூட்டுமுயற்சி

‘சீ விஜில்-26’ பயிற்சியானது, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களின் முழு ஆதரவுடன், 20-க்கும் மேற்பட்ட மத்திய மாநில அமைப்புகள் இதில் பங்கேற்றன.

ஒத்திகை

இப்பயிற்சியின்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி தலைமையகத்தின் பொறுப்பு எல்லைக்குள், பல்வேறு கடற்படை பிரிவுகள்; இந்தியக் கடலோர காவல்படை, மாநில காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமம், துறைமுக மற்றும் சுங்க அதிகாரிகள், சிவில் நிர்வாகம் மற்றும் மீனவ சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டன. நிகழ்நேர தகவல் பரிமாற்றம், சம்பவங்களுக்கு உடனடி எதிர்வினை ஆற்றுதல் மற்றும் கரை முதல் கடல் வரையிலான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன.

10,000 வீரர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு-புதுவை மண்டலத்தில், இந்தியக் கடற்படையின் 18 கப்பல்கள் மற்றும் விமானங்களும், இந்திய கடலோர காவல்படையின் 8 கப்பல்கள் மற்றும் விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன. கடல்சார் கண்காணிப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை , சுங்கத்துறை, துறைமுக அதிகாரிகள் மற்றும் மீன்வள துறையை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்; அத்துடன் சுமார் 100 மீன்பிடி படகுகளும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

அவசரகால திட்டங்கள்

துறைமுகங்கள், கடற்கரை சார்ந்த தொழிலகங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பல்வேறு பாதுகாப்பு மற்றும் அவசரகால திட்டங்கள் இந்த பயிற்சியின் மூலம் சரிபார்க்கப்பட்டன. மேலும், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கண்காணிப்பு, ரோந்து மற்றும் எதிர்வினை திறன்கள் சோதிக்கப்பட்டன.

வலுப்படுத்தல்

‘சீ விஜில்-26’ பயிற்சியின் வாயிலாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி தலைமையகம் (HQTNP), பல்வேறு அரசு துறைகள் ஆகியவை தங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு திறனை வலுப்படுத்திக் கொண்டன. மேலும், அவசரகால நடவடிக்கைகளின்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை சோதித்ததோடு, கடற்கரை பாதுகாப்பை இன்னும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் கண்டறிந்தன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X