சமையல் எரிவாயு விலை உயர்வு: பொதுமக்கள் மீது கூடுதல் சுமை - காங்கிரஸ் கண்டனம்

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று கூறிவரும் நிலையில் விலையை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வு: பொதுமக்கள் மீது கூடுதல் சுமை - காங்கிரஸ் கண்டனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும். மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. மத்திய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்ச்7-ம் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.868.50 இலிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.853 இருந்து ரூ.913 ஆகவும், மும்பையில் ரூ.852.50 இருந்து ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879 இருந்து ரூ.930 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல்19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் விலை ரூ.1929 இருந்து ரூ.2043.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், சிறிய உணவு கடைகள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் கூறிவரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையை காரணம் காட்டி சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com