தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அந்த குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, திமுக அமைத்துள்ள கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நாளை முதல் தொடங்க உள்ளது. அதன்படி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்த உள்ளது.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட 3 தொகுதிகளில் ஒன்றில்கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றிபெறவில்லை.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் கடந்த முறையை போன்றே இம்முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com