

சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த திமுக ஆட்சியில் மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார்.
இவர் 2002 - 2006 ம் ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். இவர் 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.07 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் 2020ம் ஆண்டு விசாராணையை தொடங்கிய அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 2.44 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அனுமதிக்கோரி கடந்த திமுக அரசிடம் அமலாக்கத்துறை பல முறை கடிதம் எழுதியது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு திமுக அரசு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக்கோரி அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதிக்குமா? என்பது விரைவில் தெரியவரும். அனிதா ராதாகிருஷ்ணனை போன்றே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தது. இந்த விவாரத்தில் தவெக அரசு எந்த முடிவு எடுக்கப்போகிறது? என்பது விரைவில் தெரியவரும்.