

தூத்துக்குடி,
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2026-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை (இரு நாட்களும் உட்பட) மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் (கன்னியாகுமரி நகரம் வரை) இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதால், மீன் வளத்தைப் பெருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நாட்களில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்திற்குள் மீன்பிடித் தொழில் சாராத நபர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.