புகையிலை இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்ரீகாந்தி ராமதாஸ்

புகைபிடிப்பவர்களால் வெளியேற்றப்படும் நச்சுப் புகை காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீகாந்தி ராமதாஸ்
Published on

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31-ஐ முன்னிட்டு, மனித ஆரோக்கியத்திற்கும் சமூக நலனுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை பசுமைத் தாயகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.

புகையிலை என்பது தனிநபரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், அவரது குடும்பம், சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் மருத்துவ வளங்களையும் கடுமையாக பாதிக்கும் ஒரு கொடிய பழக்கமாகும். வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், பக்கவாதம், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களுக்கு புகையிலை முக்கிய காரணமாக உள்ளது.

தமிழக அரசும் மத்திய அரசும்

புகைபிடிப்பவர்களால் வெளியேற்றப்படும் நச்சுப் புகை காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு பல்வேறு வடிவங்களில் புகையிலைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுவது எதிர்கால தலைமுறையின் நலனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:-

* புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும்.

* பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

* தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் மற்றும் பொது விளம்பரங்கள் மூலம் புகையிலையின் தீமைகள் குறித்து மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும்.

* பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலும் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் கடுமையான தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட விரும்புவோருக்கு இலவச மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

புகையிலையை ஒழிப்போம்-உயிர்களைக் காப்போம்

புகையிலை இல்லாத சமுதாயம் உருவாகுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மக்கள் நலத்திற்கும், ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானதாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் புகையிலைப் பொருட்களை முற்றிலும் புறக்கணித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற முன்வர வேண்டும். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில், "புகையிலையை ஒழிப்போம் – உயிர்களைக் காப்போம்" என்ற உறுதியை அனைவரும் ஏற்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com