கவர்னர் அர்லேகர் 3 நாள் டெல்லி பயணம்! அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவரங்களை மத்திய உள்துறை மந்திரியிடம் கவர்னர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவர்னர் அர்லேகர்
Published on: 

சென்னை,

தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 3 நாள் பயணமாக இன்று (நவம்பர் 13) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமித்ஷாவுடன் சந்திப்பு

தமிழக கவர்னர் அர்லேகர், கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது அமித்ஷா டெல்லியில் இல்லாததால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர் அர்லேகர், இன்று அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை?

இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவரங்களை மத்திய உள்துறை மந்திரியிடம் கவர்னர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சந்திப்பில் விவாதிக்கப்படும் விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஜம்மு செல்லும் கவர்னர்

கவர்னர் அர்லேகரின் பயணத் திட்டத்தின்படி, டெல்லியில் இருந்து இன்று (நவம்பர் 13) ஜம்மு செல்ல உள்ளார். அங்கு தனது பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, நவம்பர் 14-ந்தேதி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

இதைத்தொடர்ந்து, 3 நாள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நவம்பர் 15-ந்தேதி மாலை சென்னை திரும்புகிறார். கவர்னரின் இந்த டெல்லி பயணமும், மத்திய உள்துறை மந்திரியுடனான சந்திப்பும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

X