

திருச்சி,
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூ.76.82 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம், 1.488 கிலோ தங்கம் மற்றும் 3.305 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்தின் 2-வது உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், கோவில் தக்காருமான ஞானசேகரன், இணை ஆணையர் சூரியநாராயணன், மண்ணச்சநல்லூர் சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
அதில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.76 லட்சத்து 82 ஆயிரத்து 658 ரொக்கம், 1 கிலோ 488 கிராம் தங்கம், 3 கிலோ 305 கிராம் வெள்ளி, 109 வெளிநாட்டு நோட்டுகள் மற்றும் 442 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்தன.
மேலும், உப கோவில்களான ஆதிமாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 962, உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.13 ஆயிரத்து 178 மற்றும் போஜீஸ்வரர் கோவில் உண்டியல்களில் ரூ.7 ஆயிரத்து 413 காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.