

சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 9,646 கவுரவ விரிவுரையாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நவம்பர்-2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை 01.11.2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மாணாக்கர்களின் கல்விச்சேவையைப் பாதிக்காத வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் தொய்வின்றித் தொடர தங்களின் பங்களிப்பினை வழங்கிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்துவரும் கவுரவ அரசு விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/- ஆகவும், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியத்தை ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் 01.11.2026 முதல் உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 8,741 கவுரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரிந்துவரும் 319 கௌரவ அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 586 கவுரவ விரிவுரையாளர்கள் என மொத்தம் 9,646 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பயனடைவர். இதனால் இந்நிதியாண்டில் அரசுக்கு ரூ.24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.