

சென்னை,
தென் அமெரிக்காவில் ராஜகோபுரம், தெப்பக்குளத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டப்பட இருக்கிறது.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
அந்தவகையில், அமெரிக்க நாட்டை சேர்ந்த ரூபினா அரோன் என்ற இளம்பெண் பக்தர் சமயபுரத்தில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு தீ மிதிப்பது, அக்கினி சட்டி ஏந்தி தமிழ் பக்தர்கள் மரபில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள கயானாவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் போன்று ஒரு கோவில் கட்ட இருக்கிறார். இதற்காக சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார்.
52 ஏக்கர் பரப்பில்...
இதுகுறித்து சென்னையில் ரூபினா அரோன் நிருபர்களிடம் கூறும்போது, "தென்அமெரிக்காவிலுள்ள கயானாவில் வசித்தாலும் சமயபுரம் மாரியம்மன் தான் எங்களுக்குக் காவல் தெய்வம். ஆண்டுதோறும் ஆடிமாதம் சித்திரை தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வேன். சென்ற ஆண்டு அம்மனிடம் வைத்த ஒரு வேண்டுதல் நிறைவேறியது. தொடர்ந்து அங்க பிரதிஷ்டை செய்து நேர்த்திக்கடனை அருளும்படி வேண்டிக் கொண்டேன்.
அமெரிக்கா கயானாவில் 5% ஏக்கர் நிலப்பரப்பில் ராஜகோபு ரத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். சமயபுரம் மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், நவகிரகங்கள், தெப்பக்குளம், யாகசாலை, தீமிதி மைதானம், கலாசார மையம் ஆகியவற்றை அமைக்க இருக்கிறோம். இதற்கு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கத்தினர் நிதி உதவி வழங்குகின்றனர்.
அதற்கு அம்மனின் முழு அருளும் கிடைக்க அங்க பிரதிஷ்டை வழிபாடு செய்தேன். இந்த பிரார்த்தனை நிறைவேறியதும் அடுத்த ஆண்டு தேர் திருவிழாவில் கண்டிப்பாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பேன். எங்கள் நாட்டில் கோவில் கட்டுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனையும் பெற்றுள்ளேன்' என்றார்.