தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்

இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளர்.
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: ராமதாஸ்
Published on

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த, வீரத்தின் விளைநிலம் என்று போற்றப்பட்ட, கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 269-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். தீரன் சின்னமலைக்கு என தனி வீரவரலாறு உண்டு.

1756-ம் ஆண்டு இதே நாளில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசாமி-பெரியாத்தா தம்பதிக்கு மகனாக பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. அவரது இயற்பெயர் தீர்க்கதரிசி சர்க்கரை. கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காத தீர்க்கதரிசி சர்க்கரை, ஒருநாள் அந்த வரிப்பணத்தை சிறைபிடித்து அங்கிருந்த ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தார்.

அதுமட்டுமின்றி, மைசூருக்கு வரி பணத்தை வசூலித்து செல்லும் அரச பிரதிநிதியிடம், வரிப்பணத்தை சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு சின்னமலை பறித்து விட்டதாக போய் உன் அரசிடம் சொல் என்று மிரட்டி அனுப்பினார். அன்றிலிருந்துதான் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டுவதை அடியோடு எதிர்த்த ஒரு சில வீரதீர மன்னர்களில் தீரன் சின்னமலையும் ஒருவர். குறிப்பாக கேரளம் மற்றும் சேலம் பகுதிகளில் ஆங்கிலேயே படை ஒன்று சேராமல் பார்த்துக்கொண்டதில் இவருக்கு பெரும் பங்குண்டு. அதே சமயத்தில் ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்த்த திப்புசுல்தானின் வீரம் தீரன் சின்னமலைக்கு பிடித்துப் போனது.

அதனால், திப்புசுல்தானுடன் கைக்கோர்த்து, கொங்குப்படையை சீரங்கப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றி நடந்த போர்களுக்கு வழிநடத்தி சென்று திப்பு சுல்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் தீரன் சின்னமலை.

தீரன் சின்னமலையில் இந்த வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

விடுதலைப் போராட்ட வீரரும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னருமான தீரன் சின்னமலையின் 269-ம் பிறந்தநாள் இன்று பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய, ஆங்கிலேயர்களை வீழ்த்திய தன்னிகரில்லா தீரனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் நினைவு கூர்வதில் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756-ம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார்.

இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.

1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். போரிட்டு வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.

தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com