

சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், உத்திரகிடி காவல் எல்லைக்குட்பட்ட தாண்டாக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இந்த கோவில் 1980-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது. நாமக்கல் இந்து அறநிலைத்துறை ஆளுகையின் கீழ் உள்ள இக்கோவில் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் தக்கார் நிலையில் உள்ள அலுவலக அலுவலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கோவிலின் பூச்சாற்றுதல் திருவிழா கடந்த 24.02.2026 அன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இக்கோயிலில் மேலாதிக்கம் செய்யும் சிலர், அதே ஊர், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாற்று சமூகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்ற காரணத்தால் 9 குடும்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு புகார் அளித்ததின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சில குடும்பங்களை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு திருவிழா நடத்துவது கூடாது என்றும், சுமூக முடிவு எடுக்கும் வரை மேல் நடவடிக்கை எவையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை அறிக்கை அளித்தனர்.
மேலும் இது தொடர்பாக சேந்தமங்கலம் வட்டாட்சியர் முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்து கடந்த 28.02.2026 அன்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட குடும்பத்தினர் சென்ற நிலையில் கோவில் நிர்வாகிகள் என சொல்லிக் கொள்ளும் சிலர் அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் புறக்கணித்ததுடன் நாளை (09.03.2026) காலை பூச்சாற்று திருவிழாவை தன்னிச்சையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். காவல்துறையும், அறநிலையத்துறையும் இதனைக் கண்டும் காணாமல் மெத்தனமாக இருந்து வருகிறது.
ஒரே கிராமத்தில், ஒரே பகுதியில் வசிக்கும் ஒரே சமூக மக்களிடையே பிளவுபடுத்தும் நோக்கத்தில் 9 குடும்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு நடத்தப்படும் இந்த திருவிழா சட்டப்படியும், சமத்துவப்படியும் சரியானது அல்ல. ஒரே சமூக மக்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த செயல்பாட்டை தமிழக அரசும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருப்பது சிலரின் மேலாதிக்கத்தை அனுமதிப்பது போல் ஆகும். அதுமட்டுமில்லாமல் திருவிழாவை முன்னின்று நடத்தும் பழனிவேல் மற்றும் அவரது தம்பி சின்னையன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினரில் சிலர் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் கோவிலுக்குள் வந்தால் வெட்டி வீழ்த்துவோம் என்று சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
9 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு திருவிழா நடைபெற்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விஷம் குடித்தோ அல்லது தீக்குளித்தோ குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் கூட அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்.
எனவே, மக்களை பிளவுபடுத்தி, மோதல் போக்கை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதுடன், யாரையும் ஒதுக்கி வைக்காமல் திருவிழா நடத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை திருவிழாவை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.