

சென்னை,
தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை சென்றார். அங்கு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்றார். அப்போது மதுரையில் வைகை ஆறு உள்ளது. ஆனால் அதில் நீர் இல்லை. அதை சீரமைக்க வேண்டும். மேலும் வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும். அதற்கான முயற்சி யாரும் எடுக்காவிட்டால் கவர்னர் மாளிகை முயற்சி எடுக்கும் என்று பேசினார்.
அதன்பின்னர் அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனைகள் மேற்கொண்டார். அப்போது வைகை ஆறு தொடர்பாகவும், சட்டம்- ஒழுங்கு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் கவர்னரின் இந்த ஆலோசனை விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது. கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அதிகாரத்துக்குட்பட்டு ஆய்வு செய்யலாம். எந்தவித அதிகாரமும் இல்லாமல் கவர்னர் இங்கு வந்து எந்தவொரு திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது.
எங்கையாவது தேவையில்லாமல் அரசின் நிர்வாகத்தில் கவர்னர் வந்து ஆய்வு செய்வேன் என்று தலையிட்டால் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும். கண்டிப்பாக எந்த அதிகாரியும் அரசின் அனுமதி இல்லாமல் கவர்னருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட அரசு இருக்கும்போது கவர்னர் தேவையில்லாமல் ஆய்வு செய்வது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. அரசின் நடவடிக்கைகளில் கவர்னர் தலையிட கூடாது. அரசு திட்டங்களை ஆய்வு செய்ய கவர்னரை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.